Kamakshi Amman - Slokams

Home | Sri Ganesa Pancharathnam | Sri Skanda Sashti Kavacham | Abhirami Andhadhi | Lalitha Sahasranamam | Sri Siva Panchaksharam | Siva Puranam | Sri Lingashtagam | Sri Lakshmi Ashtotram | Thirupalli Ezhuchi | Thiruvembavai | Sri Kamakshi Dhuka Nivaarana Ashtakam








Thirupalli Ezhuchi

kamakshi2.jpg
Kunniyur Sri Kamakshi Amman

lalitha102.jpg
Thirupalli Ezhuchi

 
Click the link below for the Audio  by Thiruthani N Swaminathan....
 
 
01. Listen

Thiruppalli Ezhuchi Thiruvembavai

02. Listen

Thiruppalli Ezhuchi Thiruvembavai

 
******************************************************
 
மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருவண்ணாமலையில் அருளிய
திருப்பள்ளி யெழுச்சி
 
1
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே !
புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் ;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எமை உடையாய் !
எம்பெருமான் ! பள்ளி எழுந் தரு ளாயே

என் வாழ்விற்கு மூலப்பொருளே!வணக்கம்!சேற்றில் நின்று தாமரைகள் இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவபெருமானே!உயர்த்திய எருதுக்கொடியுயைடவனே!என்னை அடிமையாக உடையவனே!எம்பெருமானே வணக்கம்!பொழுது விடிந்தது. உன் அழகிய திருவடிகள் இரண்டுக்கும் ஒன்றற்கொன்று ஒத்த மலர் கொண்டு தூவினோம்;எங்களுக்கு அருள்புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி, உன்னுடைய திருவடியை வணங்குகின்றோம். பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
 

2
அருணன் இந்திரன்திசை அணுகினான் ; இருள்போய்
அகன்றது ; உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கூடி மலர, மற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன ; இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையரே ;
அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே !

திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே!திருவருட் செல்வத்தை வழங்கவரும் இன்பமலையே!அலைகடலே!அருணோதயம் கிழக்கில் அணுகிற்று. இருள் அகன்று போயிற்று. உன் திருமுகம் ஆன உதயகிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தோறும் அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. இவற்றை உணர். திருப்பெருந்துறையில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமானே, அருளாகிய செல்வத்தைத் தருகின்ற ஆனந்த மலையே!அலைகடலன்ன கருணையே!திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!

3
கூவின பூங்குயில் ; கூவின கோழி ;
குருகுகள் இயம்பின ; இயம்பின சங்கம் ;
ஒவின தாரகை ஒளி ; ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது ; விருப்பொடு நமக்குத்
தேவ் நற் செறிகழற் றாளினை காட்டாய் ;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
யாவரும் அறிவரி யாய் ; எமக் கெளியாய் ;
எம்பெரு மான் ; பள்ளி எழுந்தரு ளாயே !

மகாதேவா!திருப்பெருந்துறையுறை சிவ பெருமானே!எவராலும் அறிதற்கு அரியவனே!எங்களுக்கு, அறிந்து அனுபவித்தற்கு எளிமையானவனே!அழகிய குயில் கூவின;கோழிகள் கூவின;பறவைகள் ஒலித்தன;சங்குகள் முரன்றன;விண்மீன்கள் ஒளி குன்றின. உதயக் கதிரொளி தோன்றுகிறது. எம்பெருமானே, பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!திருவுள்ளத்தில், விருப்பம் கொண்டு எங்களுக்கு நல்ல வீரக்கழல் அணிந்த உன் திருவடி இரண்டினையும் காட்டுவாயாக!
 

4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!இனிமையான இசையைப் பொழிந்து கொண்டிருக்கும் வீணையுடையவர்களும் யாழினை உடையவர்களும் ஒரு பக்கம்;வேத மந்திரங்களுடன் துதிப்பாடல்களையும் ஓதிக் கொண்டிருப்பவர்கள் ஒருபக்கம்;நெருங்கத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளை ஏந்திய கையுடையவர்கள் ஒருபக்கம்;தலைவணங்கித் தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய்யம் மறந்து துவள்பவர்களும் ஒருபக்கம்;தலையின்மீது இரு கைகள் குவித்து அஞ்சலி செய்பவர்கள் ஒரு பக்கம்;இவ்வாறு அடியார்கள் உன் திருச்சந்தியில் விளங்குகின்றனர். ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே!பள்ளியெழுந்து அருள்வாயாக!
 
 
5
" பூதங்கள் தோன்றுநின் றாய் " எனின் அல்லால்
" போக்கிலன் வரவிலன் " எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா !
சிந்தனைக் கும்அரி யாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !

குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசனே!உன்னை ஞானியர்கள், பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர்;அதுமட்டுமல்லாமல் பிறப்பில்லாதவன் இறப்பில்லாதவன் என்று இசைப்பாடல்கள் பாடுகின்றனர் ஆடுகின்றனர்;ஆனால, உன்னை நேரே கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதால் கேட்டும் அறிந்திலோம். நீ, சிந்தனைக்கும் எட்டாதவனாய் நிற்கின்றாய்!எங்கள் கண் முன்னே வந்து திருக்காட்சி வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி எங்களை அடிமையாக ஏற்று அருள்செய்கின்ற எம்பெருமானே!பள்ளியெழுந்து அருள்வாயாக!

6
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுந் தூர்அவர் பலரும்
மைப்புறு கண்ணியார் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் ; பள்ளி எழுந்தரு ளாயே !

உமாதேவியின் மணவாளா!செம்மை நிறம் பொருந்திய தாமரை மலர்கின்ற குளுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையிலே எழுந்தருளியுள்ள பெருமானே!பரபரப்பை அறவே விட்டு உட்காட்சியில் உன்னையே கண்டுணரும் மெய்ஞ்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக்கட்டுக்களை அறுத்தவர் பலரும் மனித இயல்பிலே நின்று மைதீட்டிய கண்களையுடைய தலைவியர் போல உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர். இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள்புரியும் எம்பெருமானே!பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!
 

7
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய் ! திருப் பெருந்துறை மன்னா !
எதுஎமைப் பணிகொளும் ஆறு ? அது கேட்போம் ;
எம்பெரு மான் ! பள்ளி எழுந்தரு ளாயே !

தேன்சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைத் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே!திருப்பெருந்துறை அரசே!உன் தன்மையாகிய அது பழச்சுவை எனவும், அமுதம் எனவும் அறிந்துகொள்ள முடியாதது எனவும் தேவர்களும் அறியமாட்டார்கள். ஆனால், "இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்தச் சிவபெருமான்"என்று நாங்கள் சுட்டிக்காட்டிச் சொல்லும்படி எளிவந்த கருணையுடன் எங்களை அடிமையாக ஏற்றுக்கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்!நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது?அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்!எம் பெருமானே!பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!

8
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார் ?
பந்தணை விரலியும், நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளியபரனே !
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !
ஆரமு தே ! பள்ளி எழுந்தரு ளாயே !

எங்கும் நிறைந்த அமுதமே!அனைத்துக்கும் முற்பட்ட முதலும், நடுவும், முடிவும் ஆனவனே!பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர் வேறு யார் அறிவர்?இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற விரல்கள் யுடைய உமாதேவியடும், உன் அடியவர்களின் பழைய குடிசைதோறும் எழுந்தருளியிருக்கிறாய்!பரம்பொருளே!சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப் பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என் குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து, என்னை அடிமையாக ஏற்றாய்!பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!

9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே ! உன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே !
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே !
கடலமு தே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயி ரானாய்
எம்பெரு மான் ! பள்ளி எழுந்தரு ளாயே !

வானுலகில் உள்ள தேவர்களும் நெருங்கவும் முடியாத மேலான மெய்பொருளே!இந்த மண்ணுலகில் வந்து, உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்தவனே!வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே!பரம்பரை அடிமைகளாகிய எங்களுடைய கண்களுக்குள்ளே நின்று, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கித் தித்திக்கின்ற தேனே!பாற்கடலில் தோன்றிய அமுதமே!நெஞ்சில் இனிக்கும் கரும்பே!அன்பு செய்யும் தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே!உலகம் அனைத்துக்கும் உயிரானவனே!எம்பெருமானே!பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

10
" புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய் ! திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியுற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தே பள்ளி எழுந்தரு ளாயே ;

எங்கும் நிறைந்த அமுதமே!சிவபெருமான் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக்கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையைத் திருமாலும், நான்முகனும் கண்டனர். மண்ணுலகத்தில் நாம் போய்ப் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோமே என்று, அவர்கள் இருவரும் ஏங்குகின்றனர்;இப்படி, திருமால் விரும்பும் படியாகவும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும், உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே!பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக
 
 



ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாஷி